Tuesday, December 29, 2009

மருத்துவமனை பாடங்கள்


சென்னை நுங்கம்பாக்கம் சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையில் மூன்று நாட்கள் தங்க வேண்டியதாயிற்று. கதாவிற்கு ஓர் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அறுவை சிகிச்சை என்பதே பெரியது தான் என்றும் சிக்கல் மற்றும் ஆபத்தில்லாமல் நிறைவேற்றப் பட்டால் அதை சிறியது (மைனர் ) என்று சொல்லலாம் என்றும் மருத்துவர் கூறினார்.

பல்வேறு முகங்கள்,

பல்வேறு கவலைகள்,

பல்வேறு மொழிகள்,

ஆனால்

ஒரே மாதிரி பயங்கள் .

முதல் நாள் அனுமதிக்காக காத்திருக்கும் போது பலவித மக்களை பார்க்க முடிந்தது. சிகிச்சைக்கு வந்திருப்போர், முடிந்து திரும்புவோர், உடன் வருவோர், பார்க்க வந்தோர், வாகன ஓட்டிகள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், லிப்ட் இயக்குனர்கள், செக்குரிடிகள். இன்னும் ..... இன்னும் .....


அறை எண் நானூற்று இருபது ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு ஒரு பெண் குழந்தையும் இருந்தது. தொண்டையில் சதை வளர்ந்ததை சரி செய்யும் அறுவை சிகிச்சை அந்த சின்ன பெண்ணுக்கு செய்யப் பட்டது என தெரிந்து சொன்னார்கள். தானாக பேசவும், சிறிய சிறிய விள்ளல் களாக உணவு உண்ணவும் வேண்டும் என அந்த பெண்ணின் தாயார் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.


இரவு படுக்கும் பொது பார்த்தேன். பேண்டும் ட்டி ஷர்டும் அணிந்த ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். மறு நாள் காலை அவரிடம் எதாவது பேசலாம் என்று நினைத்தால் அவர் தெலுங்கு நாளிதழ் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். இரண்டு தினங்களாக அவரை பார்த்தாலும் மொழி காரணமாக இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவருடன் அவரது மனைவியும் மற்றும் ஒரு முதிய பெண்ணும் வந்திருந்தார்கள் . அவ்வப்போது வருவதும் போவதுமாக இருந்தார்கள்.


ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர்கள் என பக்கத்துக்கு அறையில் உள்ள பெண்மணி சொன்னார். தகவல் சொன்ன அந்த பெண் மிக பெரிய அளவில் கொலுசு அணிந்திருந்தார். அவர் அங்கேயும் இங்கேயும் போகும்போது அதன் சத்தம் அதிகமாக கேட்டு மற்றவரின் கவனத்தை அவரின்பால் ஈர்த்தது. அவர் கையில் உள்ள குழந்தைக்கு என்ன என்று விசாரிப்பதை விட அந்த கொலுசு சத்தம் அனைவரயும் கவர்ந்திருந்தது.


கதாவிற்கு சிகிச்சை முடிந்தாலும் அடுத்த நாள் வரை அங்கேயே இருக்க வேண்டியிருந்தது. மாலை நான்கு மணி அளவில் வீட்டுக்கு செல்லலாம் என்று சொன்னார்கள். சிகிச்சை நல்லபடியாக முடிந்ததே என்றிருந்தது. இது சுலபமான சிகிச்சை தான் என்றும் ஆபத்து ஏதும் இல்லை என்றும் மருத்துவர் பலமுறை சொல்லியிருந்தாலும் என் மனைவிக்கும், அம்மாவிற்கும் மனது கேட்கவில்லை. தனக்கு மருத்துவ ரீதியான சிகிச்சை அளிக்கப் பட்டிருப்பது தெரியாமலேயே கதா விளையாடிக் கொண்டிருந்தான். மாலை மூன்று மணி அளவில் திடீரென அழுகுரல் கேட்டது. ஆந்திரப் பெண்ணும், அவரது தாயாரை போல இருந்த மற்றொரு முதிய பெண்ணும் பெருங்குரலில் அழுதுகொண்டு இருந்தார்கள். அவர்களின் குழந்தைக்கு கொஞ்சம் சீரியஸ் என்று பேசிக்கொண்டார்கள். ஒரு செவிலி பெண்ணிடம் வினவிய போது தகவல்கள் ஏதும் சொல்ல மறுத்து விட்டார். எனினும், கொஞ்சம் கஷ்டம் தான் என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.


" இங்கே வந்துள்ள எந்த குழந்தைக்கும் எதுவும் ஆகக்கூடாது என்பது தான் என் பிரார்த்தனை " என்று ஒரு பெண் வேண்டிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்து பல டாக்டர்கள் அந்த ரூமுக்குள் அவசர அவசரமாக போனார்கள். பல வித ஆலோசனைகள் நடந்தன. மருந்துகள் சென்றன. சில இயந்திரங்களையும் கொண்டு சென்றார்கள். சுமார் அரை மணி நேர பர பரப்பிற்குப்பின் அந்த குழந்தை இறந்து விட்டதாக அறிவித்தார்கள்.


அந்த குழந்தையின் தாயும் அவரது தாயும் கதறிய கதறல் எவரையும் கரைப்பதாக இருந்தது. என்னால் அந்த இடத்தில நிற்க முடிய வில்லை. ஆனால் குழந்தையின் தந்தையானவர் மட்டும் தனது முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை . இறுக்கமான முகத்தோடு இருந்த அவர் மட்டும் அழவே இல்லை.


டாக்டர்கள் அவரிடம் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவரும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரது மன உறுதி என்னை வியப்புக் குள்ளாக்கியது. எனினும் எல்லோரும் அழுதால் ஒருவரும் ஆறுதல் பெற முடியாது தானே என எண்ணிக்க கொண்டேன்.


அதற்குள் எங்களுக்கு அழைப்பு வந்தது. எங்களுக்கான பட்டியல் கிழே அனுப்பப் பட்டிருப்பதாகவும், அதற்கான தொகையை செலுத்தி விட்டு வருமாறும் தெரிவிக் கப்பட்டது. நான் கிழே சென்று அதற்கான வேலைகளைப் பார்க்க சென்று விட்டேன். பட்டியல் தொகை செலுத்தும் போது உபயோக படுத்தாத மருந்துகளை திரும்ப கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிந்தேன்.


பணம் செலுத்தி விட்டு மேலே சென்று மீதம் இருந்த சொற்ப மருந்துகளை எடுத்துக் கொண்டு மீண்டும் கிழே மருந்தகத்திற்கு சென்றேன். அங்கே மருந்து வாங்குபவர்கள் அதிகமாக இருந்ததால் சற்று விலகி நின்றேன். வாங்குபவர்கள் முதலில் வாங்கட்டும் நான் ரிட்டர்ன் கொடுக்கத் தானே வந்தேன். அந்த நேரம் அவர் வந்தார். கைகள் இரண்டிலும் பல பைகள். அவை அனைத்திலும் ஏகமான மருந்துகள். அணைத்து பைகளையும் திரும்ப கொடுத்தார். கடைக்குள் இருந்த பையன் பில் கொடுங்க என்றான். இடது புற கால் சட்டை பையில் இருந்து கை கொள்ளாத அளவிற்கு பில் களை எடுத்துக் கொடுத்தார். கற்றை கற்றையான பட்டியல்கள். சற்று காத்திருக்குமாறு அவரிடம் சொன்னார்கள். அவர் படிகளை விட்டு இறங்கி அங்கு நின்று கொண்டிருந்த கார்களின் பக்கமாக சென்றார். கலங்காமல் இருக்கும் அவரது மன உறுதியை கண்டு வியந்து கொண்டிருந்தேன். எதிர் பாரத விதமாக திடீரென அவர் விசித்து விசித்து அழ ஆரம்பித்தார்.


எவ்வளவு நம்பிக்கையோடு அந்த மருந்துகளை வாங்கினார்களோ ? எவ்வளவு செலவு செய்தார்களோ ? உபயோக படுத்தாத மருந்துகளுக்கான பணத்தை திரும்ப வாங்கலாம். ஆனால் போன உயிருக்கு என்ன செய்ய ?


அந்தக் கண்ணீருக்கான பதில் என்ன ?


யார் மீது தவறு ?


என் மனதில் எழுந்த பலவித வினாக்கள் கொக்கிகளாக மாறி என் தொண்டை குழியை அடைத்து விட்டன . இனி ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு போகும் போதும் அவரது அழுத முகம் காரணமிலாமல் நினைவுக்கு வரும் என்று நினைத்துக் கொண்டேன்.

மருத்துவமனையில் முன் பின் அறியாத ஒரு பெண் சொன்ன வார்த்தைகள் எதிரொலித்தன. " இங்கே வந்துள்ள எந்த குழந்தைக்கும் எதுவும் ஆகக்கூடாது என்பது தான் என் பிரார்த்தனை "

No comments:

Post a Comment