பரோட்டா என்ற உணவு எவ்வளவு பிரசித்தி பெற்றது என்பது நான் எழாவது படிக்கும் வரை எனக்கு தெரியாது. முரளி என்ற நண்பன் ஒரு நாள் தான் தனது அப்பா அம்மா சகோதரருடன் முந்தைய தினம் சினிமா சென்றுவிட்டு திரும்பும் போது தான் மட்டும் ஒன்பது பரோட்டகளை சாப்பிட்டதாக தெரிவித்தான். அவை குருமா மற்றும் சால்னாவுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் என்றும் அதன் பெருமைகளை அள்ளி விட்டான். பரோட்டவுடன் பரிமாறப்படும் சால்னாவை விட அவன் கதை அதிக ஆர்வத்தை தூண்டி விட்டது.
எப்படியாவது பரோட்டாவை ருசி பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் சென்றது. அப்பாவுக்கு மைதா மாவு பண்டங்கள் பிடிக்காது. ஆனாலும் என் ஆசையை வெளியிட்டேன். அப்பாவும் சரி என்றார். ஆனால் அப்பாவின் அகராதியில் சரி என்றோ வாங்குவோம் என்றோ சொன்னால் அது வீடோ பவர் போலத்தான்.
ஒரு நாள் ஸ்கௌட் ஆசிரியர் மாணவர்கள் தானாகவே சுயமாக காரியங்களை செய்வதற்கு பயிற்சி பெரும் பொருட்டு ஒரு பயிற்சி பட்டறை நடத்துவதாக தெரிவித்தார். அது பள்ளியிலேயே அடுத்த சனிக் கிழமையன்று நடைபெறும் என்று தெரிவித்தார்.
காலை உணவாக, மைதா மாவால் செய்த சப்பாத்திகள் தயாரிக்கப் பட்டன. ஆனாலும் அவை பரோட்டா போல் இல்லை எனவும், அதன் ருசியே தனி என்றும் முரளி உள்ளிட்ட பரோட்டா ரசிகர் பட்டாளம் சொன்னது. இன்றுவரை அதாவது ஏழாவது படிக்கும் வரை நான் பரோட்டாவை சாப்பிட்டதில்லை என்பது அவர்களுக்கு சிரிப்பாகவும், அது ஒரு தகுதியிண்மையாகவும் பேசப் பட்டது. ஆச்சர்யமாக எனக்கு துணையாக ஒருவரும் இல்லை. பிரபு என்ற பையன் தானும் பரோட்டா சப்பிட்டிருப்பதாக சொல்லி அவர்கள் பக்கம் இருந்தான். ஆனால் அவன் " அய்யர் " என்பதால் அவன் பொய் சொல்லி மெஜாரிட்டி கட்சியில் சேர்ந்து விட்டதாக பெரியசாமி என்னிடம் ரகசியமாக சொன்னான். அய்யர் என்பதற்கும் பரோட்டா சாப்பிடுவதற்கும் உள்ள தர்க்க அல்லது வழக்க ரிதியான முரண்பாடுகள் என்னவென்று எனக்கு புரியவில்லை.
இறுதியாக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக பரோட்டா சாப்பிடுவதால் சற்றே அவசரம் இருந்தது. சூடாக சிறிய வட்ட வடிவில் இருந்த பரோட்டாக்களை கையில் எடுத்து தாறு மாறாக பிய்த்து ஒருவர் என் இலையில் போட்டார். வெண்மை நிறத்தில் சிறு சிறு பழுப்பு மற்றும் கருப்பு பொட்டுக்களுடன் பார்க்கவே ஆசை அதிகமாகியது. அதன் மணமும் புதியதாக ஆவலை தூண்டும் வண்ணம் இருந்தது. திடீரென்று அடர் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவத்தை ஒரு பெரிய கரண்டி நிறைய ஊற்றினார்கள். என்ன எது என்று நிதானிப்பதற்குள் பரோட்டக்கள் எல்லாம் பாழாகி விட்டது. அது சால்னா என்றும் பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள சால்நாவே சிறந்தது என்றும் கூட வந்தவர்கள் சொன்னார்கள். கறி மிகவும் சிறிய பீசாக உள்ளது என்று சுப்புராஜ் சொன்னான். இது கறி குழம்பா ? ஏது என்றல்லவா சொன்னாங்க என்று நினைதுக்கொண்டிருந்தேன். கறி என்ற வார்த்தையை கேட்டதுமே பரோட்டா ஆசை எல்லாம் போய் விட்டது. பின்னர் வேறு இலை மாற்றி வெறும் சட்னியுடன் ரெண்டே ரெண்டு பரோட்டா சாப்பிட்டேன். பரோட்டாவுக்கு சட்னியா என்று பரிமாறுபவன் சலித்துக்கொண்டான்.
பின்னர் பல்வேறு வெஜிடேரியன் பரோட்டகளை ருசித்திருந்தாலும் முதல் அனுபவம் மறக்க முடியவில்லை. காரைக்குடி ப்ரெசிடென்ட் ஹோட்டலில் சிறிய ருசி மிக்க பரோட்டக்களை மூன்று வித சட்னி மற்றும் குருமாவுடன் (வெஜிடேரியன்தான் ) அடிக்கடி சாப்பிட்டிருக்கிறேன்.
இயற்கை உணவுகள் லிஸ்டில் மைதா மாவில் செய்த பண்டங்களுக்கு அறவே இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள். நானும் தற்போது பரோட்டக்களை விரும்பி உண்பதில்லை.
ஒருமுறை கோவில்பட்டியில் ஒரு கடையில் பொறித்த பரோட்டா, பாம்பனில் ஒரு கடையில் முட்டை பரோட்டா, நெடு நேரம் கடந்த பின்னர் மிகவும் பசியான நேரத்தில் கிடைத்த தொட்டுக்கொள்ள ஏதும் இல்லாத போதும் அமிர்தமாக இருந்த ஆறிப்போன திருபுன வாசல் கடை பரோட்டா என்று பரோட்டா பற்றிய அனுபவங்கள் பல உண்டு.
No comments:
Post a Comment